முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு: அரியலூர் மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை

நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த அரியலூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ்
பகிர்:

அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நீட் தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

செந்துறை அருகேயுள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு விக்னேஷ்(19), வினோத்(16) என இரு மகன்கள் உள்ளனர். விஸ்வநாதன் பெட்டிக் கடை வைத்துள்ளார்.

இவர்களது மூத்த மகன் விக்னேஷ் மருத்துவராக வேண்டும் என்று லட்சியத்தில் கடினமாக படித்து வந்துள்ளார். செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர், பொதுத்தேர்வில் 1006 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட எலந்தங்குழி கிராம மக்கள்

அதன்பின்னர் கேரளத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திலும், திருச்சி துறையூர் சௌடாம்பிகா நீட் தேர்வு மையத்திலும் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த விக்னேஷ்,  2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் ஒரு முறை தோல்வியும், ஒரு முறை தேர்ச்சியும் பெற்ற  நிலையிலும் மருத்துவர் சீட் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் 3 ஆவது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாகப் படித்து வந்துள்ளார். 13-ஆம் தேதி தேர்வு எழுத இருந்த நிலையில், இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராக முடியுமா என்று கடந்த இரு நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட எலந்தங்குழி கிராம மக்கள்

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதன்கிழமை பிற்பகல், ஊரிலுள்ள கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்த போது விக்னேஷ் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த கிராம மக்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயங்கொண்டம் சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →