மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் மறைவு: ஸ்டாலின், வைகோ இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் மறைவிற்கு மு.க.ஸ்டாலின், வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் மறைவிற்கு மு.க.ஸ்டாலின், வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடித்தட்டு மக்களை - குறிப்பாக, தொழிலாளர் வர்க்கத்தைப் பாதிக்கும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சிந்தனையாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து தவிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தளகர்த்தர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.தங்கவேல் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன்.
நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தவர் அவர். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தவர் அவர். அனைத்துக் கட்சியினரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர்.அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், தமிழ்நாட்டின் பொதுவாழ்வுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.