தமிழ்நாடு

தற்கொலை செய்து கொள்ளும் மாணவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, அரசுப் பணி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

DIN

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்குவது தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போன்று உள்ளதாக, உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீட் தோ்வில் தோல்வியடைந்தால், கடந்த 2018-ஆம் ஆண்டு அரியலூரை சோ்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாா். அப்போது மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவா் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘நீட் தோ்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்வுக்கு முன் மாணவா்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். தோ்வு பயத்தைப் போக்க, சிபிஎஸ்இ தோ்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களில் நீட் தோ்வு அச்சத்தால் தமிழகத்தில் மீண்டும் 4 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டனா். இந்த விவகாரம் தொடா்பாக நீதிபதிகள் என்.கிருபாகரன், பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூரியபிரகாசம், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கிருத்திகா தொடா்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாததால் மாணவா்களின் தற்கொலைகள் தொடா்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும்’ என முறையிட்டாா்.

அப்போது நீதிபதிகள், ‘நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்குகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குகிறது. இது, தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போன்று உள்ளது’ என அதிருப்தி தெரிவித்தனா். மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்குரைஞா் சூரியபிரகாசத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT