பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரை நீதிமன்றங்கள் கூட சுயமாக செயல்பட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது:
மதுரையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருப்பவர் என்ற கண்ணியத்துடன் நரேந்திர மோடி பேசவில்லை. தென் தமிழகத்தில் ஜவுளிப் பூங்கா, மதுரையில் எய்ம்ஸ் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தற்போது உறுதியளித்துள்ள பிரதமர், கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது இதுவரை ஏன் செயல்டுத்தவில்லை.
பண மதிப்பிழப்பு முதல் தற்போது வரை சிறு குறு தொழில்கள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. நூல் விலையேற்றதால், ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் முடிந்துவிட்டன. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்படவில்லை. சேது சமுத்திர திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணாத பிரதமர், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கூறுகிறார்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த பாஜக நிர்வாகி அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். கோவையில் பாஜகவினர் கடைகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நேரத்திலேயே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினர், எதிர்கட்சிகள் மீது குறை கூறுவதை நிறுத்த வேண்டும். பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரை, நீதிமன்றங்கள் கூட சுயமாக செயல்பட முடியாது.
எதிர்கட்சியினரின் பிரசாரத்தை முடக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் உறவினர்கள் வீடுகள் உள்பட 17 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்ற அச்சம் காரணமாக வருமான வரித்துறையினர் மூலம் நெருக்கடி அளிக்க முயற்சிக்கின்றனர்.
அதிமுகவினர் வீடு வீடாக பணம் விநியோகித்து வரும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் அதனை தடுக்க முயற்சிக்காமல் வாகனங்களில் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் துரிதமாக செயல்படுவதாக காட்டிக் கொள்ளும் தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு நாள் நெருங்கும் நேரத்தில் சுணங்கிவிடுவது வழக்கமாகிவிட்டது. பண பலத்துக்கு எதிராக தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
அப்போது திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் என்.பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கே.பாலபாரதி, இரா.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.