முகப்பு
தமிழ்நாடு

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் மறுத்தது ஏன்? முதல்வர் விளக்கம்

மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதிக்கு இடம் மறுத்தது ஏன்? என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதிக்கு இடம் மறுத்தது ஏன்? என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உள்பட்ட வனவாசியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு பதிலளித்த கருணாநிதி, மறைந்த முதலமைச்சர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது. 
ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகளின் வாயிலாக தெரிவித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அதேபோல மறைந்த முதலமைச்சர் காமராஜர் இறந்த பொழுது மெரினாவில் அவரை அடக்கம் செய்ய முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வலியுறுத்தியதாகவும், அதற்கும் கருணாநிதி, காமராஜர் தற்போது முதலமைச்சராக இல்லை, ஆகவே, முன்னாள் முதலமைச்சருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். 
அந்த அடிப்படையில் தான் மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று, தான் தெரிவித்ததாக விளக்கமளித்தார். மேலும் கருணாநிதியை அடக்கம் செய்ய, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிரே கொடுத்ததாகவும், ஆனால் அதை பெற மறுத்து ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றதாகவும், நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மனைவி ஜானகி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோர் இறப்பின்போது என்ன முடிவு எடுத்தாரோ, அந்த முடிவை தான், தானும் பின்பற்றியதாக முதல் அமைச்சர் விளக்கமளித்தார்கள். உண்மை இப்படி இருக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரசாரம் செய்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →