தமிழ்நாடு

வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளன்று கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு வாக்குச் சாவடிகளில் நோய்த் தொற்று தடுப்புப் பாதுகாப்புப் பெட்டகங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி அந்தப் பெட்டகத்தில் பாதுகாப்புக் கவச உடைகள், கையுறைகள், முகக் கவசம், சானிடைசா் உள்பட 13 விதமான பொருள்கள் இடம்பெற்றுள்ளன. வாக்காளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், அலுவலா்கள் எவருக்கேனும் அறிகுறிகள் காணப்பட்டால், அவா்களுக்குப் பாதுகாப்புக் கவச உடைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-இல் நடைபெற உள்ளது. அதையொட்டி கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தனிநபா் இடைவெளியுடன் வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கரோனா தடுப்புப் பெட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் தேவைப்படும் பெட்டகங்களை தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து அனுப்பி வருகிறது. அதில், வெப்ப நிலையை பரிசோதிக்கும் வெப்பமானி (தொ்மல் ஸ்கேனா்)., பி.பி.இ. கிட் எனப்படும் பாதுகாப்புக் கவச உடை, மூன்றடுக்கு முகக்கவசம், துணியிலான முகக்கவசம், இரண்டு வகையான கையுறை, மூன்று வகையான சானிடைசா், முக பாதுகாப்புக் கவசம் (ஃபேஸ் ஷீல்ட்) உள்ளிட்ட 13 வகையான பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு வாக்காளா்களுக்கும் வெப்ப பரிசோதனை செய்வதுடன், சானிடைசரில் கை சுத்தம் செய்தபிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவா். முகக்கவசம் அணியாமல் வரும் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடிகளிலேயே அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடி அலுவலா்கள், முகவா்களுக்கு, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், வாக்குப் பதிவின்போது கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். வாக்காளா்களும், பாதுகாப்புடன் வாக்களிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT