முகப்பு
தமிழ்நாடு

25 கி.மீ. நடந்து வந்து வாக்களித்த காணி இன மக்கள்

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாபநாசம் வனப்பகுதியில் உள்ள இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் காணியின மக்கள் 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாபநாசம் வனப்பகுதியில் உள்ள இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் காணியின மக்கள் 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பாபநாசம் அணை பகுதியில் உள்ள ஆரம்பப்புள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

பாபநாசம் அணை ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடியில் 435 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச்சாவடியில் சேர்வலாறு பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியர்கள், காணி இனமக்கள், அகஸ்தியர் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்கும் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரான காணி இனமக்கள் வாக்கு செலுத்துவர். 

இவர்களில் இஞ்சிக்குழி கிராமத்தில் வசிக்கும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்காக சுமார் 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக இஞ்சிக்குழி கிராமத்திலிருந்து வாக்காளர்கள் நடந்து வந்து வாக்களித்தனர். 

இது குறித்து இஞ்சிக்குழியில் வசிக்கும் ஐயப்பன் கூறியது, இஞ்சிக்குழி கிராமத்தில் 21 வாக்காளர்கள் உள்ளோம். ஒவ்வொரு தேர்தலுக்கும் நாங்கள் வாக்கு செலுத்துவதற்காக 25 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து வாக்கு செலுத்தி வருகிறோம். 

எங்களில் 3 பேர் சுழற்சி முறையில் கிராம காவலுக்கு இருந்து கொண்டு மீதமுள்ளவர்கள் அனைவரும் வந்து வாக்களித்துச் செல்வோம். நடந்து வருவதற்கு 5 மணி நேரம் ஆகும். எனவே நேற்று இரவு சின்னமயிலாறு வந்து உறவினர்கள் வீட்டில் தங்கி இன்று காலை வாக்கு செலுத்தினோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.