முழு ஊரடங்கு இருக்காது; ஆனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: கோ. பிரகாஷ்
சென்னையில் உள்ள உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது, ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கரோனா கட்டுபாட்டு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை அறிய மக்கள் 044 46122300, 044 25384520 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். தேவைப்படுவோர் மட்டும் தொடர்புகொள்ளுங்கள், தேவையின்றி பிராங்க் கால் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், 'சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். சென்னையில் உள்ள உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை அதிகாரபூர்வமாக வெளியாகும்.
கரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 அல்லது 30 நாள்களுக்கு உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
சென்னையில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு கிடையாது. இன்றைக்குக்கூட 3 லட்சம் டோஸ் வந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
மொத்தமுள்ள 12,600 படுக்கைகளில் 1,104 படுக்கைகள் மட்டுமே நிரம்பியிருக்கிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் 80% பேர் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.