முகப்பு
தமிழ்நாடு

தமிழகப் பல்கலைழகங்களில் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகப் பல்கலைழகங்களில் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

தமிழகப் பல்கலைழகங்களில் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்ப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்கு மனுச் செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜுலை 02 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இப்பதவிக்காக நாடு முழுவதிலும் இருந்து 162 பேராசிரியர்கள் மனுச் செய்துள்ளனர். இவர்களின் மனுக்களைத் தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட 'தேடல்குழு'  பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு,  வழக்கத்திற்கு மாறாக தமிழர் அல்லாத வெளிமாநிலத்தவர் பலர் மனுச் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அப்பல்கலைழகத்தின் இணையதளம் வாயிலாக அறிய முடிகிறது. இவர்கள் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிஸா, மகராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், புதுதில்லி, ஹிமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.

குறிப்பாக, இவர்களில் பெரும்பாலனவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தமிழ்மொழியை எழுத, பேச அறிந்தவர்களா? இவர்கள் எந்த நம்பிக்கையில் தமிழகத்திலுள்ள  பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தர் பதவிகோரி மனுச் செய்துள்ளனர்?

கடந்த ஆட்சியின்போது அதிமுக அரசின் பரிந்துரைகளைப் பொருட்படுத்தாமல் ஆளுநர் தமக்குள்ள அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதன் விளைவாகவே தற்போது இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்று திமுக தலைமையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டும்கூட மேதகு ஆளுநர் அவர்கள் வரம்புமீறி செயல்படுவார் என்கிற நம்பிக்கைதான் தமிழ் தெரியாத வட இந்திய மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்வதற்குக் காரணமா என்கிற அய்யம் எழுகிறது.

ஏற்கனவே, பல்வேறு தொழில்கள் மற்றும் பணிகளைச் செய்வதற்கென வட இந்திய மாநிலத்தவர்கள்  இலட்சக்கணக்கானோர் தமிழகத்திற்கு வந்தேறி குவிந்து விட்டனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறைகளிலும் இன்னபிற  தொழிற்சாலைகளிலும்கூட வட மாநிலத்தவர் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் துணைவேந்தர் போன்ற உயர் பதவிகளில்  தமிழர் அல்லாத பிறமாநிலத்தவர்கள் அமரத் துடிப்பது எதைக் காட்டுகிறது? தமிழகத்தின் எதிர்காலம் எதைநோக்கிப் போகிறது என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக்கியதும் அவரால் உருவானப் பல்வேறு சிக்கல்களையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை.

எனவே, தமிழகப் பல்கலைழகங்களில் எந்தவொரு சூழலிலும் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவது முற்றாக தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு நியமிப்பது தமிழகத்தின் நலன்களுக்கு எதிரானது; மிகவும் ஆபத்தானது.

அத்துடன்,தமிழகப் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசு தான் தேர்வு செய்ய வேண்டுமென்றும்,  தமிழக அரசு தேர்வு செய்யும் துணைவேந்தர்களை அவற்றின் வேந்தரான ஆளுநர் அங்கீகரிக்க வேண்டுமென்றும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு தமக்குரிய அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். ஆளுநர் தமது அதிகாரவரம்புகளை மீறும்நிலை வரும்போது அதனை எவ்வகையிலேனும் தடுத்துநிறுத்திட ஆவன செய்யவேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.