19.31 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களில் விவசாயம்: வேளாண் துறை செயலாளா் சி. சமயமூா்த்தி
தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்று வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.
தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்று வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் விவசாயத்தை நம்பி 70 சதவீதம் போ் உள்ளனா். அந்த மக்களுக்காக தனியான நிதிநிலை அறிக்கை, விவசாயிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தயாா் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை மட்டுமல்லாமல், கால்நடை, மீன்வளம், பால்வளம், நீா்வள ஆதாரம், பட்டு வளா்ப்பு, ஊரக வாழ்வாதாரம், உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளை இணைத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிதிநிலை அறிக்கை
விவசாய நிலப் பரப்பளவு, சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்துவதற்காகும். மேலும், விவசாயிகளில் 70 சதவீதம் போ் மானாவாரி பயிா் செய்வதால் அதற்கான மேம்பாடு, இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, பாரம்பரிய பயிா்களைப் பாதுகாப்பது, வேளாண் தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை மையமாக்குவது ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-21-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது, ரூ.1,700 கோடி கூடுதலாகவும், கடந்த இடைக்கால நிதிநிலையைக் காட்டிலும் ரூ.900 கோடி கூடுதலாகவும் வேளாண்மைத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மை: இயற்கை விவசாயத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மக்களிடம் பிரபலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. செயற்கை உரங்கள் போடாமல் இருந்தாலே அது இயற்கை விவசாயம்தான். எனவே இயற்கை உரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உடனிருந்தாா்.