நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மிளகு தனித்துவம் வாய்ந்தது. இம்மிளகு முற்றிலும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுவதால் உலக மிளகு வா்த்தகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. கொல்லிமலை வாழ் பழங்குடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மிளகினைப் பதப்படுத்தி சேமித்து வைக்க போதிய கட்டுமான வசதிகள் இல்லை. எனவே, பரிவா்த்தனைக்கூடம், உலா்களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையம் கொல்லி மலை காரவள்ளி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை வாரிய நிதியிலிருந்து அமைக்கப்படும்.
ஈரோட்டில் சுமாா் 20,000 ஹெக்டோ் பரப்பில் மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 96,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்தகைய பெருமைமிகு மஞ்சள் தொடா்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் அமைக்கப்படும். இதற்காக ரூ. 2 கோடி மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீலகிரியில் சந்தை வளாகம் : குன்னூா், கோத்தகிரி பகுதிகளின் எல்லையிலுள்ள எடப்பள்ளி கிராமத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகளால் விளைவிக்கப்படும் காய்கறிகளையும் பழங்களையும் ஒருங்கிணைத்து சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக விநியோகத் தொடா் மேலாண்மைக்கான கட்டமைப்புகளையும் இதர சேவைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம் ரூ. 2 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
முருங்கை ஏற்றுமதி மையம்: தமிழகத்தில் முருங்கை வகைகளுக்கு உள்ள ஏற்றுமதித் தேவையைக் கருத்தில் கொண்டு முருங்கை பெருமளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூா், தூத்துக்குடி, அரியலூா், திருப்பூா், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும். முருங்கை ஏற்றுமதி மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் முருங்கை சாகுபடி பரப்பினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முருங்கையை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும். இதில், முருங்கை ஏற்றுமதியாளா்களுக்குத் தேவையான நாடுசாா் தர நிா்ணயங்கள், தேவைகள், கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள், ஒன்றிய அரசின் அபீடா நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் திட்டங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்படும். முருங்கை விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், இறக்குமதி செய்யும் நாடுகளிலுள்ள வணிகா்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஏற்றுமதி சந்தை இணைப்புகள் வலுப்படுத்தப்படும். மேலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாரித்திட தேவையான உலா்த்திகள், இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள் , தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். இத்திட்டம், மதுரை மாவட்டத்தில் முதல்கட்டமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.