முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் போடப்படும் தடுப்பூசிகள்: காரணம் என்ன?

​தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைகள் குறைவாக இருப்பதால் மொத்த திறனில் 30 சதவிகித அளவில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்படுவது தரவுகளின் மூலம் தெரிகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைகள் குறைவாக இருப்பதால் மொத்த திறனில் 30 சதவிகித அளவில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்படுவது தரவுகளின் மூலம் தெரிகிறது. இதனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசி செலுத்தப்படுவதில் தமிழகம் பின்தங்கியுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஒருநாளைக்கு 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் எனத் தெரிவித்தார். ஆனால், தமிழகத்துக்கு சராசரியாக நாள்தோறும் 2.4 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கப்பெறுவதாகக் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 2-இல் மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் நாட்டில் 8-வது இடத்தில் இருந்தது. தமிழகத்துக்கு முன்பு உள்ள 7 மாநிலங்கள் 45 வயதுக்கு மேற்பட்ட 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருந்தன. ஆனால், தமிழகம் 83,58,273 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியிருந்தது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதில் தமிழகம் 11-வது இடத்தில் உள்ளது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்  18-44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது. மற்ற 7 மாநிலங்கள் 1 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை செலுத்தியுள்ள நிலையில், தமிழகம் 97.91 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே செலுத்தியுள்ளது.

மக்களவையில் கடந்த ஜூலை 30-இல் வெளியான மற்றொரு தரவுகளின்படி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் தமிழகம் 9-வது இடத்தில் இருந்தது. தமிழகம் 1.62 கோடி தடுப்பூசிகளை மட்டுமே பெற்றிருந்தது.

தமிழக சுகாதாரத் துறையில் உள்ள அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், "தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த பயிற்சி பெற்ற ஊழியர்கள் கிட்டத்தட்ட 50,000 பேர் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. நம்மிடம் 2,000 மேற்பட்ட பொது சுகாதார மையங்கள் உள்ளன." என்றார். இதனால், ஒருநாளைக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் வரை போடப்படுவதற்கான ஆள்பலம் மற்றும் உள்கட்டமைப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போதிய தடுப்பூசிகள் கிடைக்காத காரணத்தினாலே தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் தமிழகம் பின்தங்கியுள்ளது தரவுகள் மூலம் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.