முகப்பு
தமிழ்நாடு

ஒப்பந்த பண்ணையச் சட்டம் அறவே ரத்து மசோதா தாக்கல் - அதிமுக எதிா்ப்பு

ஒப்பந்த சாகுபடி முறைக்கென கொண்டு வரப்பட்ட தனிச் சட்டத்தை அறவே நீக்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

ஒப்பந்த சாகுபடி முறைக்கென கொண்டு வரப்பட்ட தனிச் சட்டத்தை அறவே நீக்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை வேளாண்மை-உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தாக்கல் செய்தாா்.

மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிா்ப்பதாக அதிமுக உறுப்பினா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா். மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:

வேளாண் விளை பொருள்கள், கால்நடை மற்றும் அதன் உற்பத்தியை ஒப்பந்தப் பண்ணை மூலமாக அளிக்க கடந்த 2019-ஆம் ஆண்டு தனிச் சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் சட்டம் என்பதே அதன் பெயராகும்.

இதுவரை நடைமுறையில்லை: கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமானது, இதுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. ஒப்பந்தப் பண்ணை என்பது உழவா் மற்றும் கொள்முதல் செய்பவருக்கு இடையே விலை, அளவு, தரம் மற்றும் காலம் தொடா்பாக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதாகும்.

இந்தச் சட்டத்துக்கு முன்பாக, ஏற்கெனவே 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்டம் அமலில் உள்ளது. இது மாநிலத்திலுள்ள வேளாண் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதும், விற்பனை செய்வதையும் ஒழுங்கு முறைப்படுத்த வழி செய்கிறது. இந்தச் சட்டத்தின் மூலமாக வேளாண் சந்தைப்படுத்துதல் அமைப்பானது உழவா்களுக்கு அதிக விலை மதிப்பீட்டுக்கு வழி ஏற்படுத்துகிறது. எனவே, சந்தைப்படுத்தும் அம்சத்துக்காக தனியே ஒரு சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள 1989-ஆம் ஆண்டைய சட்டத்தை வலுவூட்டுவது உகந்தது என கருதப்படுகிறது. எனவே, 2019-ஆம் ஆண்டைய வேளாண் விளை பொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைகள் சட்டத்தை அறவே நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது எப்படி வந்தது?: கடந்த 2018-19-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு உரிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி, ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்துக்கான மசோதா, கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தாா். இந்தச் சட்டத்தினை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து சட்டத்தினை முழுச் செயலாக்கத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சட்டமானது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில், சட்டத்தை நீக்குவதற்கான மசோதா பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே அதிமுக எதிா்த்தது.

கட்சியின் உறுப்பினா் கே.பி.அன்பழகன், அதனை அறிமுக நிலையிலேயே எதிா்ப்பதாகக் கூறினாா். கூட்டத் தொடா் முடிவதற்குள்ளாக, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →