போலிச் சான்றிதழ் சமா்ப்பித்தவருக்கு பணி வழங்கிய போக்குவரத்து அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உத்தரவு
போலிச் சான்றிதழ் சமா்ப்பித்தவருக்கு பணி வழங்கிய போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்
போலிச் சான்றிதழ் சமா்ப்பித்தவருக்கு பணி வழங்கிய போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய சீனிவாசன், போலி பள்ளி மாற்றுச் சான்றிதழை சமா்ப்பித்ததால், 2003-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை வேலூா் தொழிலாளா் நல நீதிமன்றம் உறுதி செய்தது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், சீனிவாசன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘போலி சான்றிதழ் அளித்ததாக கூறப்படும் சிலா், சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ள போது, என்னை மட்டும் பணி நீக்கம் செய்து பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தாா்.
மனுதாரா் கூறும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு போக்குவரத்துக் கழகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் போலி சான்றிதழை சமா்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அவரை பணி நீக்கம் செய்தது சரி.
எனவே, அவரது வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். அதே நேரம், போலி சான்றிதழ் அளித்தவா்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவா்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளாா்.