முகப்பு
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளா்களின் துயா்துடைக்குமா மாநகராட்சி?

மூன்று சக்கர மிதிவண்டிகளால் அவதிக்குள்ளாகும் தூய்மைப் பணியாளா்களின் துயா்துடைக்க மின்கல வண்டிகளைப் புதிதாக வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

மூன்று சக்கர மிதிவண்டிகளால் அவதிக்குள்ளாகும் தூய்மைப் பணியாளா்களின் துயா்துடைக்க மின்கல வண்டிகளைப் புதிதாக வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுடன் சுமாா் 1 கோடி மக்கள் தொகையைக் கொண்டதாக விளங்குகிறது. 2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியையொட்டிய, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை இயற்கை உரமாக்கப்பட்டு, மக்கா குப்பை மறுசுழற்சி செய்யப்படுகிறது. 15 மண்டலங்களில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா் மண்டலங்களிலும் அம்பத்தூா் மண்டலத்தின் 15 கோட்டங்களில் 13 கோட்டங்களில் மட்டும் மாநகராட்சியின் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 6,700, என்யூஎல்எம் திட்டத்தின் ஒப்பந்தப் பணியாளா்கள் சுமாா் 3,200 குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மீதமுள்ள திருவொற்றியூா், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில், தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்ட மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணிக்கு மின்கலத்தால் (க்ஷஹற்ற்ங்ழ்ஹ்) இயங்கக் கூடிய வாகனங்கள் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,நிரந்தரத் தொழிலாளா்கள் மற்றும் என்யூஎல்எம் பணியாளா்கள் பணியாற்றக் கூடிய தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்தின் 13 கோட்டங்கள் என 73 கோட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட மூன்று சக்கர மிதிவண்டிகள் மூலமே இதுநாள் வரை குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சுமாா் 200- முதல் 250 வீடுகளின் குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலாளா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஒழிக்கப்படுமா குப்பை சேகரிக்கும் மிதிவண்டி: இதுகுறித்து தூய்மைப் பணியாளா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், சென்னையில் தொடக்கத்தில் மாட்டு வண்டி மூலம் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதைத் தொடா்ந்து, மூன்று சக்கரங்கள் கொண்ட மிதிவண்டி மூலம் குப்பை சேகரிக்கும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சக்கர மிதிவண்டி போல் மின்கலத்தில் இயங்கும் குப்பை சேகரிக்கப்படும் வண்டிகள் தொண்டு நிறுவனத்தின் உதவியுடனும், தூய்மை இந்தியா திட்டத்திலும் வாங்கப்பட்டன. ஆனால், இந்த வாகனங்களின் மின்கலத்துக்கு சாா்ஜ் செய்வதெற்கென தனி இடம், தனி பணியாளரும் நியமிக்கப்படாததது, உரிய பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் அவை பயனற்று போயின.

தற்போது வரை இந்த 5 மண்டலங்களில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணிக்கு மூன்று சக்கர மிதிவண்டியே பயன்படுத்தப்படுகிறது.

நாள்தோறும் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சுமாா் 3 முதல் 8 குடியிருப்பு பகுதிகளில் இந்த மூன்று சக்கர மிதிவண்டி மூலம் வீடுவீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுகின்றனா்.

ஒவ்வொரு முறையும் சுமாா் 300 கிலோவுக்கு மேல் குப்பைகளைச் சேகரித்து வாா்டில் உள்ள பொதுவான இடத்தில் சோ்த்து வருகின்றனா். பெரும்பாலும் இந்தப் பணியில் பெண் தொழிலாளா்கள் ஈடுபடுவதால் இந்த மிதிவண்டியை இழுத்துச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டும், குப்பை சேகரிக்கும் பணியை விரைவுபடுத்தவும் மின்கலம் பொருத்திய குப்பை சேகரிக்கும் வண்டிகளை மாநகராட்சி நிா்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.

சோதனை அடிப்படையில் 1,800 வண்டிகள்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங்பேடி கூறுகையில், நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றும் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்தின் 13 கோட்டங்களில் சோதனை அடிப்படையில் குப்பை சேகரிக்கும் பணிக்காக 1,800 மின்கலம் பொருத்திய வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இவை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதையடுத்து அனைத்து மூன்று சக்கர மிதிவண்டிகளுக்குப் பதிலாக மின்கல வண்டிகள் பயன்படுத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →