சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், இறந்தவர்கள் அல்லது ஆளே இல்லாமல் 80 பேர் பணியாற்றுவதாக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த முறைகேடு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களின் பெயர்களை பதிவு செய்யும் இரண்டு பேர், கடந்த மார்ச் மாதம் முதல் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு சுமார் 11 லட்சம் வரை முறைகேடு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டி. மணிகண்டன் என்பவர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், எனது தந்தை எத்தனை நாள்கள் பணியாற்றியிருக்கிறார் என்பதை கணக்குப் பார்க்க நான் இணையதளத்தைப் பரிசோதித்தேன். பிறகு, எனது உறவினரின் பணி நாள்களை பரிசோதிக்க நினைத்து, அவரது ஐ.டியை பதிவிட்டேன். ஆனால் அப்போது தவறுதலாக ஒரு எண்ணை மாற்றி பதிவிட்டுவிட்டேன். அப்போது அதில் வேறொருவரின் தகவல்கள் வந்தன. அவரும் எனக்குத் தெரிந்தவர் தான். ஆனால் அவர் இறந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவர் பெயரும், அவர் பணியாற்றியதாகவும் தகவல்கள் பதிவாகியிருந்தன.
இது குறித்து வி. குணசேகரன் என்பவர், கிளார் கிராம மக்கள் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தார் அலுவலகத்துக்கும் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், தனது கிராமத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தும் இரண்டு பேர் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கூலி வேலைக்கு வராதவர்களின் பெயர்களையும் சேர்த்து முறைகேடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்கள் சிலருக்கு இரண்டு அடையாள அட்டைகள் உள்ளன. ஏதோ தவறுதலாக தங்களுக்கு இரண்டு அட்டைகள் வந்துவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெயரை இரண்டு முறை பதிவு செய்து, ஒன்று அவர்களது வங்கிக் கணக்கும், மற்றொன்றில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் குணசேகரன்.
இந்த இரண்டு பேர்தான், பல ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திட்டத்தின் கீழ் பெயர்களை சேர்த்து வருகிறார்கள். இது குறித்து நாங்கள் அண்மையில் சோதனை செய்தபோது, பல போலியான பெயர்கள் இடம்பெற்றிருந்ததைக் கண்டறிந்தோம். அது மட்டுமா, அந்த திட்டத்தில் பணியாற்றுவதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளதில் 24 பேர் இறந்தேவிட்டார்கள் என்கிறார் குணசேகரன் வேதனையோடு. இந்த முறைகேடு கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருவதாகவும் அவர் சந்தேகிக்கிறார்.
இந்த மோசடி குறித்து பெரும்பாலான தகவல்களை சேகரித்திருக்கும் குணசேகரன், அதில் தவறாக பதியப்பட்டிருக்கும் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளார். அந்தந்த பெயருடன், அவர்கள் வெளிஊரில் வசிப்பவர்கள், யாரென்றே தெரியாது, இரண்டு முறை பெயர் பதிவு, இறந்துவிட்டார்கள் என்று தனித்தனியாக அடையாளப்படுத்தியுள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் எம். ஆர்த்தியிடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.