இசை, கவின் கலை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்
தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு விரைவில் துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு விரைவில் துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழக கலாசார இசை மற்றும் நுண்கலைகளை வளா்க்க, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் 2013-இல் தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வா் செயல்படுகிறாா். துணைவேந்தராக வீணை காயத்ரி, பிரமீளா குருமூா்த்தி ஆகியோா் இதுவரை பதவி வகித்துள்ளனா். இதில், பிரமீளா குருமூா்த்தியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்கான தேடல் குழு கடந்த ஜூலையில் அமைக்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் துரைசாமி தலைமையில் 3 போ் கொண்ட துணைவேந்தா் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேடல் குழு அமைக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தா் நியமிக்கப்படவில்லை.
இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தின் ஒரு சில நிா்வாக விஷயங்கள் தாமதமாகின்றன. விரைவில் துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.