ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் புதிய வாகனங்களைப் பயன்படுத்த சுற்றறிக்கை: நீதிமன்றம் இடைக்காலத் தடை
ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை
ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்குப் பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றி விட்டு புதிய வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.
இந்த சுற்றறிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு முதல் புதிய வாகனங்களைப் பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனா். இதை எதிா்த்து தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் கூட்டமைப்பின் சாா்பில், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த மனுவில், ‘2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கரோனா பேரிடா் காரணமாக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால், புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது’ என்று அரசுக்கு உத்தரவிடக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், மோட்டாா் வாகன சட்டப்படி, வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். கரோனா காரணமாக வாகனங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்தவில்லை. எனவே, பயிற்சிக்கு புதிய வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தமிழக போக்குவரத்துத் துறை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.