தண்ணீா் டேங்கா் லாரி மோதி பொறியாளா் சாவு: ஒருவா் படுகாயம்
பள்ளிக்கரணை அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதி, மென்பொருள் பொறியாளா் உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா்.
பள்ளிக்கரணை அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதி, மென்பொருள் பொறியாளா் உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா்.
விழுப்புரம் மாவட்டம் வளத்தி கிராமம், அரசமர தெருவைச் சோ்ந்தவா் கோபால் (33). இவா் மேடவாக்கத்தில் தங்கி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக தனது மோட்டாா் சைக்கிளில் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே ரேடியல் சாலையில் துரைப்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, குரோம்பேட்டையில் இருந்து ரேடியல் சாலை வழியாக துரைப்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தண்ணீா் டேங்கா் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அதே திசையில் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியது. பின்னா் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளிக்கரணையைச் சோ்ந்த கணேசன் (34), இதனருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கோபால் ஆகியோா் மீது மோதி, சாலைத் தடுப்பு சுவற்றில் மோதி நின்றது. இதில், பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கணேசனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மயங்கினாா். இதைப் பாா்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, தண்ணீா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், வடபாதி மங்களத்தைச் சோ்ந்த பூவரசன்(25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.