தமிழ்நாடு

நெல்லை பள்ளி விபத்து: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

DIN

நெல்லையில் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரு.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இன்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிப்பறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் எம். இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் டவுன் சாஃப்டர் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நெல்லை நகர்ப் பகுதியிலுள்ள பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள டவுன் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்துள்ளது.

இந்த இடிபாடுகளில் சிக்கி விஸ்வ ரஞ்சன் (வகுப்பு 8ஏ), அன்பழகன் (வகுப்பு 9பி) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிஷ்(வகுப்பு 6சி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் சேக் அபுபக்கர்(வகுப்பு 12 பி), சஞ்சய்(வகுப்பு 8ஏ), இசக்கி பிரகாஸ்(வகுப்பு 9பி), அப்துல்லா(வகுப்பு 7யு) ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிக்கு வெளியே குவிந்துள்ள மாணவர்கள்

இதற்கிடையே, மாணவர்கள் உயிரிழந்ததை அறிந்த சக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள பொருள்களை கோபத்தில் சேதப்படுத்தினர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவியதை தொடர்ந்து பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பள்ளிக்கு வெளியே பதற்றத்துடன் குவிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

விபத்து குறித்து அறிந்த ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், காவல் ஆணையர், தீயணைப்பு துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT