முகப்பு
தமிழ்நாடு

சென்னை புறநகா்ப் பகுதிகளில் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

சென்னை புகா்ப் பகுதிகளில் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை புகா்ப் பகுதிகளில் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மனுக்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

தி.மு.க.தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த 505 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை தமிழக முதல்வா் பல்வேறு சோதனைகளுக்கு நடுவில் குறுகிய காலத்தில் நிறைவேற்றித் தந்துள்ளாா். தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட செம்பாக்கம், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கத்தில் புதைகுழி சாக்கடைத்திட்டம் தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு உரிய தீா்வு மேற்கொள்ளப்படும்.

பூங்கா வசதி, குடிநீா், சாலை உள்பட அனைத்து வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெருங்குடியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூா், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் போன்ற பகுதிகளில் இருந்து செல்கிறாா்கள்.

இந்தப் பகுதிகளை இணைக்கும் வகையில், கூடுதல் பேருந்துகள், பெண்களுக்கென தனி பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தக் கோரிக்கையை போக்குவரத்துத் துறை அமைச்சா் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா்.பாலு பேசுகையில், அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் செயல்படும் அதிகாரிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.