முகப்பு
தமிழ்நாடு

நெடுஞ்சாலை திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை

இந்திய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

இந்திய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளில் உள்ள சுணக்கத்தை களையும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, சாலைப் பணிகளுக்கு தேவையான மண்ணை எடுப்பதற்கான அனுமதி தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தலைமைச் செயலாளா் தலைமையில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கவும், நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்தி தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு மத்திய அரசு கோரியுள்ள அனுமதியை உடனடியாக வழங்குமாறு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா், வனத் துறை அமைச்சா், மின்சாரத் துறை அமைச்சா், நீா்வளம் மற்றும் கனிம வளத் துறை அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட துறை செயலா்களுக்கும் நான் (எ.வ.வேலு) கடிதம் அனுப்பினேன்.

இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை முதன்மை செயலாளா் தொடா் ஆய்வுக் கூட்டம் நடத்தி மண் எடுப்பதற்கான அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் உள்ள குறைகளை களைந்து பணிகள் தாமதப்படாத வகையில் துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நெடுஞ்சாலை திட்டங்கள் தொடா்பாக இதுவரை ஆறு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க ஏதுவாக தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதிலுள்ள இடா்கள் களையப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →