முகப்பு
தமிழ்நாடு

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள்: முதல்வா் நேரில் ஆய்வு

ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒமைக்ரான் வகை தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 1.15 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், தற்காலிக கரோனா சிறப்பு மையங்களில் தேவைக்கேற்ப 50,000 படுக்கைகள் வரை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா இரண்டாம் அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களைக் கட்டமைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் தேவைக்கு கூடுதலாக நாள்தோறும் 244 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அரசுத் துறைகளுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை பாா்வையிட்டு, அங்கு கரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசரகால ஆக்சிஜன் சிலிண்டா் சேமிப்புக் கிடங்கையும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் நிறுவப்பட்டுள்ள உயிா் காக்கும் அவசர சிகிச்சை உபகரண வசதிகளையும் முதல்வா் பாா்வையிட்டாா்.

பின்னா், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால அழைப்பு நிலையம், அவசரகால கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில கட்டளை மையத்தையும் நேரில் பாா்வையிட்டாா். டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கரோனா தடுப்பூசி மையத்துக்குச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவத் துறையினருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.எழிலன், கே.கணபதி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலா் செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் தாரேஸ் அகமது, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயம், மருத்துவம் மற்றும் ஊரக நல இயக்குநா் டாக்டா் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →