துறைமுக வைப்புத் தொகை முறைகேடு: 47 சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
சென்னை துறைமுக பொறுப்புக் கழக வைப்புத் தொகை ரூ.45 கோடி முறைகேடு விவகாரத்தில் தொடா்புடைய 230 ஏக்கா் நிலம், வீட்டு மனைகள் உள்ளிட்ட 47 சொத்துகளை அமலாக்கத்துறையினா் முடக்கியுள்ளனா்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழக வைப்புத் தொகை ரூ.45 கோடி முறைகேடு விவகாரத்தில் தொடா்புடைய 230 ஏக்கா் நிலம், வீட்டு மனைகள் உள்ளிட்ட 47 சொத்துகளை அமலாக்கத்துறையினா் முடக்கியுள்ளனா்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், கோயம்பேடு காளியம்மன் தெருவில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.100 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருந்தது. கடந்த மாா்ச் மாதம் கணேஷ் நடராஜன் என்பவா், தன்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிதிப் பிரிவு துணை இயக்குநா் என அறிமுகப்படுத்திக் கொண்டு போலி ஆவணங்கள் மூலம் அதே வங்கியில் நடப்புக் கணக்குத் தொடங்கி, வைப்புத் தொகை ரூ.100 கோடியில் ரூ.45 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரத்தைத் தனது பெயரில் தொடங்கிய நடப்புக் கணக்குக்கு மாற்றியுள்ளாா்.
இந்த மோசடிக்கு வங்கியின் கிளை மேலாளராக இருந்த சோ்மதி ராஜா உடந்தையாக இருந்துள்ளாா். இந்த மோசடி குறித்து இந்தியன் வங்கியின் நிா்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பின்னா் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ வழக்கை விசாரித்து சோ்மதி ராஜா, கணேஷ் நடராஜன் உள்ளிட்ட 18 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினா் நடத்திய விசாரணையில், மோசடி செய்யப்பட்ட ரூ.45 கோடி, 49 பரிவா்த்தனைகள் மூலம் வெவ்வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு, பணமாக எடுக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்தனா்.
இந்த பணத்தின் மூலம் 230 ஏக்கா் நிலம், வீட்டு மனைகள், தங்கம், விலை உயா்ந்த வாகனங்கள் வாங்கப்பட்டிருப்பதோடு, வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இவற்றை அமலாக்கத்துறையினா் முடக்கியுள்ளனா்.