தமிழ்நாடு

தந்தை சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்ட மணமக்கள்

DIN

பட்டுக்கோட்டையில், மறைந்த தந்தையின் உருவத்தைச் சிலையாக உருவாக்கி, தங்கை திருமண வரவேற்பு விழாவில் நிறுத்தி, அதன் முன்பாக மணமக்களை மாலை மாற்றிக்கொள்ளச் செய்த சகோதரியின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல்  நகரைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வம். இவர் மனைவி கலாவதி. கடந்த 2012-ம் ஆண்டு செல்வம் இறந்து விட்டார். அவர் உயிருடன் இருக்கும் போதே தனது மூன்று  மகள்களில் இரண்டு பேருக்கு திருமணம் நடத்தி முடித்து  விட்டார்.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வத்தின் மூன்றாவது மகள் லெட்சுமிபிரபாவுக்கும் (25), கிஷோர் என்ற மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மணமகள் லெட்சுமிபிரபா தனது தந்தை இல்லாத குறையை எண்ணி வருந்திய நிலையில் இருந்தார்.

தங்கையின் வருத்தத்தை அறிந்த லண்டனில் மருத்துவராகப் பணியாற்றும் மூத்த சகோதரி புவனேஸ்வரி (37), அவரது கணவர் கார்த்திக் ஆகிய இருவரும், செல்வத்தின் உருவத்தைச் சிலையாக உருவாக்க முடிவு செய்தனர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் செல்வத்தின் சிலையை  வடிவமைத்து வாங்கினர்.

இதைத்தொடர்ந்து, பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற தங்கை லெட்சுமிபிரபா திருமண வரவேற்பு விழாவின் போது, மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவச் சிலையை புவனேஸ்வரி மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தி, தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தந்தையின் சிலையைப் பார்த்து அதிர்ந்துபோன லெட்சுமிபிரபா ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர், தந்தையின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தந்தை சிலையின் அருகே தாயை நிற்கச் செய்து இருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். இச்சம்பவம் நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, புவனேஸ்வரி கூறுகையில், எங்கள் தந்தை 3 மகள்களில் முதல் இருவரின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தினார். ஆனால், கடைசி மகள் திருமணத்தின் போது அவர் இல்லையே என்ற வருத்தம் அனைவருக்கும் இருந்தது. 

இதனால், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில், சுமார்  ரூ.6 லட்சம் செலவில் தந்தையின் சிலையை உருவாக்க முடிவு செய்தோம். சிலை தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது பெங்களூரு சென்று தயாராகி வந்த சிலையைப் பார்வையிட்டோம். இந்த சிலையைக் கண்டதும் எனது தங்கை ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். தத்ரூபமான சிலையைப் பார்த்த ஒட்டு மொத்த உறவினர்களும் சில நிமிஷம் கண் கலங்கினர் என்றார் உணர்ச்சி பொங்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT