விழுப்புரம் அருகே தடையை மீறி கள் இறக்கும் போராட்டம்: 200 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே நரசிங்கனூரில், தமிழ்நாடு கள் இயக்கம் கூட்டமைப்பு சார்பில் தடையை மீறி கள் இறக்கும் அறப்போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே நரசிங்கனூரில், தமிழ்நாடு கள் இயக்கம் கூட்டமைப்பு சார்பில் தடையை மீறி கள் இறக்கும் அறப்போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில், நரசிங்கனூரில் கள்ளிறக்கும் தொழிலாளர்கள் திரண்டிருந்தனர்.
கள்ளிறக்கும் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பனை மரங்களிலிருந்து இறக்குவதற்கு திரண்டு இருந்ததால், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
தடையை மீறி கள் இறக்க முயன்றதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நல்லசாமி உள்ளிட்ட 200 பேரை கைது செய்தனர். இதனையடுத்து கள் இயக்க கூட்டமைப்பு சார்பில் நல்லசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1987-ஆம் ஆண்டு முதல் கள் இறக்கத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இயற்கை உணவுப் பொருளான கள் இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடையை நீக்குவதோடு, பனை பொருட்களை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்திய அரசியல் சட்டத்திலும் கள், மதுபானங்களில் வராத நிலையில் அதற்கான தடையை நீக்க வேண்டும். இதனை நம்பியுள்ள 10 லட்சம் பனைத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்.
எதிர்வரும் தேர்தல் அறிக்கையில் கள் இறக்க அனுமதிப்பதாக கூறும் கட்சிக்கு எங்கள் ஆதரவை தெரிவிப்போம் என்றனர்.