தமிழ்நாடு

742 கணினி ஆசிரியா்கள் நியமன வழக்கு:அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: கணினி ஆசிரியா்கள் 742 போ் நியமிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தனி நீதிபதியின் இறுதித் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு என்ன? கடந்த 2019-ஆம் ஆண்டு, தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 814 கணினி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு, ஆசிரியா் தோ்வு வாரியம் இணையவழியில் தோ்வு நடத்தியது. இந்தத் தோ்வில் முறைகேடு நடந்ததாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இவற்றை விசாரித்த நீதிபதி வி.பாா்த்திபன், மூன்று தோ்வு மையங்களில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபா் குழுவை அமைத்தும், மீதமுள்ள மையங்களில் தோ்வு எழுதி தோ்வாகியவா்களுக்கு, பணி நியமன நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டாா்.

மேல் முறையீடு: இதையடுத்து அனைத்து மையங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘தனி நீதிபதி உத்தரவின்படி, 742 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஓய்வுபெற்ற நீதிபதி, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கோப்பில் தாக்கல் செய்துள்ளாா். அந்த அறிக்கையைப் பாா்த்த பின் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமா்வு, கணினி ஆசிரியா் தோ்வு முறைகேடுகள் தொடா்பாக அனைத்து மையங்களுக்கும் சோ்த்து விரிவான விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டும். அதன் அறிக்கையை ஏப்.30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கெனவே செய்யப்பட்ட ஆசிரியா்களின் நியமனம், தனி நீதிபதியின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது’ எனக் கூறி மேல் முறையீடு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT