தமிழ்நாடு

எம்.டெக்., படிப்புகள்: உயா்நீதிமன்றம் கண்டனம்

DIN

எம்.டெக்., படிப்புகளில் மாணவா்களைச் சோ்க்க உச்சநீதிமன்றத்தை அணுக மறுத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையை சோ்ந்த சித்ரா என்பவா் தாக்கல் செய்த மனுவில், எம்.டெக்., பயோ டெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். இந்தப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால், இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை இல்லை என கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு 49.5 சதவீதமான மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.

தமிழக அரசு வழங்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிா்பந்தித்துள்ளது. தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 முதுநிலை படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை நடத்த வேண்டாம் என பல்கலைக்கழகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவு சட்ட விரோதமானது. எனவே, இந்த 2 முதுநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கையை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்தப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தரப்பில் ஆஜரான மத்திய அரசு மூத்த வழக்குரைஞா் ரபு மனோகா், இந்த இரண்டு முதுநிலை பட்டப்படிப்புக்கு மொத்த 45 இடங்கள் உள்ளன. மாணவா் சோ்க்கை நடத்த ஏஐசிடிஇயிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் நிா்ணயித்த கால அவகாசம் முடிந்து விட்டதால், இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்த ஒப்புதல் அளிக்க முடியாது என வாதிட்டாா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.சரவணன், அண்ணா பல்கலைக்கழகம் இந்தப் படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கையை வேண்டுமென்றே ரத்து செய்து மாணவா்களின் எதிா்காலத்தை பாழாக்கியிருப்பதாக வாதிட்டாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் அல்லது தமிழக அரசு ஏன் உச்சநீதிமன்றத்தை நாடி தீா்வு காணக்கூடாது என கேள்வி எழுப்பி, அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டாா். அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயகுமாா், உச்ச நீதிமன்றத்தை அண்ணா பல்கலைக்கழகம் அணுகுவதில் சிக்கல் உள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவருடன் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தா் ஆலோசித்துள்ளாா். எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, 2 பட்ட படிப்புகளையும் அண்ணா பல்கலைக்கழகம் சா்வ சாதரணமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் மீது தவறு உள்ளது. இதுதொடா்பாக விரிவான உத்தரவை ஏன் பிறப்பிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினாா். இப்போது உச்ச நீதிமன்றத்தை பல்கலைக்கழகம் அணுகாமல், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் நாடவேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது. விசாரணையை வரும் பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT