பாரதியார், ஒளவையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி
பாரதியார், ஒளவையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பாரதியார், ஒளவையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரிகைபுரிந்த பிரதமர் மோடி இலங்கை தமிழர்களின் உரிமைகளை காப்போம்; இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார். நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் இருந்து மீன், கருவாடு இலங்கைக்கு ஏற்றுமதி செய்வது நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் இதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இதனால் சென்னையில் மட்டும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 6 ஆயிரம் டன் கருவாடு தேங்கிக் கிடக்கிறது. இதனால் கடுமையான பொருளாதார இழப்பை மீனவர்கள் சந்தித்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்ட பிறகும் இலங்கை அரசின் தடையை நீக்குகிற சூழல் ஏற்படவில்லை.
அதேபோல, மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கடந்த ஜனவரி இறுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று மீனவர்கள் கோரிக்கை எழுப்பினார்கள். எந்த ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி மீனவர்களுக்கென தனி அமைச்சகம், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு நவீன வசதிகள் கொண்ட படகுகள் வழங்கப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்ததோ, அதே ராமநாதபுரத்தில்தான் படுகொலை செய்யப்பட்டு நீதிக்காக போராடுகிறார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாத பா.ஜ.க. அரசு படுகொலைக்குக் காரணமான இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. இதை விட மீனவர் விரோதப் போக்கு வேறு என்ன இருக்கமுடியும்?
எனவே, இந்தியாவிலேயே பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் மகாகவி பாரதியார், ஒளவையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார். தமிழர்களுக்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைளை எடுத்திருக்கிற பிரதமர் மோடி விரித்திருக்கிற மாயவலையில் மடியில் கணம் உள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுயமரியாதையும், மானமும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மோடியின் மாயவலையில் சிக்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.