தமிழ்நாடு

ஊர்க்காவல் படையினருக்கு 10 நாள் மட்டுமே பணி: அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு

DIN

ஊர்க்காவல் படையினருக்கு 10 நாள் மட்டுமே பணி என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக காவல்துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது ஊர் காவல் படை. இவர்கள் இரவு பகல் பாராமல் பல்வேறு காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

கடந்த 2017-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நாளொன்றுக்கு ரூ.150 என நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை, ரூ.560 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பணி நாள்களை 5 நாள்கள் என நிர்ணயம் செய்தும் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஊர்காவல் படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாள்களை 10 நாள்களாக அதிகரித்து, கடந்த 2019 - ஆம் பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக அரசின் உள்துறை அரசாணை பிறப்பித்தது. 

10 நாள்கள் மட்டுமே பணி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், மாதம் முழுவதும் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். 10 நாள்களுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த 2019-ஆம் ஆண்டு அரசாணைப்படி 4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு ரூ.280 மட்டுமே ஊதியம் வழங்கப்படும் எனவும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியிலிருந்தால் மட்டுமே ரூ.560 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே காவல்துறையின் பெரும்பாலான பணிகளைச் செய்யும்  ஊர்க்காவல் படையினருக்கு 10 நாள்கள் மட்டுமே ஊதியம் வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்ய வேண்டும். மாதம் முழுவதற்குமான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை டிஜிபி ஆகியோர்  10 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT