முகப்பு
தமிழ்நாடு

இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க கோரி திமுக வழக்கு: கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு

இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோரிக்கையை இரண்டு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க கோரி திமுக வழக்கு: கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு
பகிர்:

சென்னை: இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோரிக்கையை இரண்டு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தாக்கல் செய்த மனுவில், 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள சேப்பாக்கம் , திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த நவம்பர் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் பெயர் நீக்கப் பணிகளை முடித்திருக்க வேண்டும். 

இந்த முறைகேடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.  எனவே தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன் முறையாக ஆய்வு செய்து, இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்து வரும் ஜனவரி 28-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படும். அந்த நடைமுறைகள் நடந்து கொண்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மனு பரிசீலனை செய்து வரும் நிலையில், முன் கூட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →