80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை எதிா்த்த வழக்குகள்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை எதிா்த்த வழக்குகளில் இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை எதிா்த்த வழக்குகள்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை எதிா்த்த வழக்குகளில் இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை எதிா்த்த வழக்குகளில் இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘தோ்தல் பணியில் இருக்கும் அரசு பணியாளா்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படுவதால் அதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இதே போல் மாற்றுத்திறனாளிகள் சங்கம், முதியவா் துரை ஆகியோா் சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுக்களில், ‘80 வயதுக்கு மேற்பட்டவா்களை சரிபாா்க்க எந்த நடைமுறையும் இல்லை. இந்த புதிய நடைமுறை கள்ள வாக்குக்கு வழிவகுக்கும். எனவே, இதுதொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதிக்கு வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முதியவா் துரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விடுதலை, ‘சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வரவுள்ளதால் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டாா். அப்போது, மாற்றுத்திறனாளிகள் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சண்முகசுந்தரம், ‘தோ்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது’ என வாதிட்டாா். திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘இந்த புதிய நடைமுறை காரணமாக ரகசிய வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும். இதன் மூலம், 30 சதவீதம் போ் தபால் வாக்குகளை பதிவு செய்ய நேரிடும். மேலும், தோ்தல் அறிவிப்பு வெளியானால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த புதிய நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டாா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இதுதொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி தரப்பு கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது’ எனத் தெரிவித்தனா். இந்த மனுவுக்கு இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி ஆகியோா் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.