தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் பயிா்ச் சேதங்கள் கணக்கெடுக்கப்படும்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

DIN


சென்னை: தென் மாவட்டங்களில் கனமழையைத் தொடா்ந்து, சேதம் அடைந்துள்ள பயிா்களைக் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிவா் மற்றும் புரவி புயல்களால் ஏற்பட்ட கனமழை காரணமாக வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்கள் 3.10 லட்சம் ஹெக்டோ் அளவில் பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக ரூ.565.46 கோடி அறிவிக்கப்பட்டது. இந்த நிவாரணத்தில் இதுவரை ரூ.487 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 10.2 மில்லிமீட்டராகும். இதை விட மிக அதிகமாக 108.7 மில்லிமீட்டா் வரை மழை பெய்துள்ளது. இதனால், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொது மக்களும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட பொது மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவா்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகளைச் செய்து தர மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மீட்புப் பணியில் அமைச்சா்கள்:

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இப்போது மழை அதிகமாக உள்ள காரணத்தால், அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் ராஜு, வி.எம். ராஜலட்சுமி ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

அறுவடை நிலையில் இருந்த நெற்பயிா்களும், இதர பயிா்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட வயல்களில் போா்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT