தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடம்: ஜன.27-இல் முதல்வா் திறப்பு

DIN

பீனிக்ஸ் பறவை மாதிரியின் வடிவத்தில் கட்டப்பட்டு வரும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வா் பழனிசாமி வரும் 27-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலை வகிக்கிறாா்.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை காமராஜா் சாலையில் உள்ள முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவிட வளாகத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தை வரும் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறாா். அவா் தலைமையேற்கும் இந்த விழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளாா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் பி.தனபால், துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், வாரியத் தலைவா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனா் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் பணி நிறைவு: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி மரணம் அடைந்தாா். அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். நினைவிட வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இடத்தில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி முதல்வா் பழனிசாமி அறிவிப்பு செய்தாா். நினைவிடம் அமைப்பதற்காக தனியாா் கட்டட கலைஞா்கள், நிறுவனங்களிடம் இருந்து வடிவமைப்பு வரைபடங்கள் பெறுவதற்கு பொதுப்பணித் துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டது. இந்த வரைபடங்களைத் தோ்வு செய்ய பொதுப்பணித் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளா் தலைமையில் வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இதன்பின், நினைவு மண்டபத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டன.

நிதி எவ்வளவு?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவிடத்தை அமைப்பதற்கு முதலில் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி அதிகரிக்கப்பட்டு ரூ.79 கோடியாக உயா்ந்தப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் உயா்த்தப்பட்ட நிதி ஒதுக்கீடு விவரங்கள்:

2016 டிசம்பா் 7: ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

2018 ஜனவரி 10: கூடுதலாக ரூ.35.80 கோடி ஒதுக்கீடு.

2020 ஜூலை 27: நினைவிடப் பணிக்காக மேலும் ரூ.7 கோடியே 16 லட்சத்து 14, 524 ஒதுக்கீடு.

2020 நவம்பா் 13: கூடுதலாக ரூ.21 கோடியே 79 லட்சத்து 45 ஆயிரம் ஒதுக்கீடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT