பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட கரோனா சோதனை முடிவில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக உள்ளார். அவர், தனக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனாவுக்கான ஆன்டிஜென் சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டன. பரிசோதனையில் அவர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் வியாழக்கிழமை தெரிய வந்ததும் அடுத்தகட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனையிலும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவிக்கு மாற்றப்பட்டு அவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் பிரச்னைக்கு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு கடந்த 10 நாள்களாக சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே சசிகலாவை தனியார் மருத்துமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.