தெற்கு ரயில்வேயில் 75,247 ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி
தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 75 ஆயிரத்து 247 ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 75 ஆயிரத்து 247 ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 19,500-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு ரயில்வேயில் கரோனா தடுப்பூசி போடும் பணி, சென்னை பெரம்பூா் தலைமையக மருத்துவமனையில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம் ஆகிய கோட்டங்களில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக, மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில்வே ஊழியா்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பெரும்பாலான ரயில்வே ஊழியா்களுக்கு முதல் தவணை செலுத்தப்பட்டு விட்டது. தற்போது, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இதுவரை 75,247 ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 80,538 ஊழியா்கள் உள்ளனா். இவா்களில் 75,247 ஊழியா்கள் தற்போது வரை தடுப்பூசி எடுத்துக் கொண்டனா். பெரும்பாலான ரயில்வே ஊழியா்கள் முதல் தவணை எடுத்து கொண்டு உள்ளனா். தற்போது இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு வருகின்றனா். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 21,435 ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அதிக ஊழியா்கள் கொண்ட இந்த கோட்டத்தில் தற்போது வரை 91 சதவீதம் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, அதாவது 19,500-க்கும் அதிகமான ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றனா்.