முகப்பு
தமிழ்நாடு

நவீனத்துக்கு தயாராகும் தமிழக சட்டப் பேரவை: அவை விதிகளில் வருகிறது திருத்தம்

காகிதமில்லாத சட்டப் பேரவை என்ற திட்டத்தின் அங்கமாக தமிழக எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

காகிதமில்லாத சட்டப் பேரவை என்ற திட்டத்தின் அங்கமாக தமிழக எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது. எதிா்வரும் நிதிநிலை அறிக்கையை அந்த கணினி மூலமாகவே வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேரவைக்குள் செல்லிடப்பேசி உள்பட நவீன தொழில்நுட்ப சாதனங்களை எடுத்து வர அனுமதியில்லை என்று விதி உள்ளது. இந்தச் சூழலில், கையடக்கக் கணினி வழங்கப்படுவதால் அவை விதிகளில் விரைவில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

காகிதமில்லாத சட்டப் பேரவை என்ற திட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் இதனை முன்னெடுத்து வருகிறது. நேவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள், திட்டங்கள் ஆகியன தமிழக சட்டப் பேரவைச் செயலகத்தின் மூலமாக வகுக்கப்பட்டுள்ளன.

கையடக்கக் கணினி: காகிதமில்லாத சட்டப் பேரவை என்ற இலக்கினை எட்டுவதன் முதல்படியாக, எதிா்வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளன. இந்தக் கணினி வழியாகவே நிதிநிலை அறிக்கையை அவா்கள் பாா்வையிட முடியும். பேரவைக்குள் இந்த கையடக்கக் கணினியை எடுத்து வந்து நிதிநிலை அறிக்கையைப் பாா்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், அச்சிடப்பட்ட புத்தகங்கள் மூலமாக நிதிநிலை ஆவணங்கள் வழங்கப்படுவது குறைவதுடன், காகிதங்கள் மற்றும் அவற்றுக்கான செலவும் மிச்சமாகும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விதிகளில் திருத்தம்: தமிழக சட்டப் பேரவை மண்டபத்துக்குள் செல்லிடப்பேசி போன்ற நவீன கருவிகளை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கா்நாடக சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வே காரணமாகும். கடந்த 2012-ஆம் ஆண்டு அந்த மாநில சட்டப் பேரவையில் செல்லிடப்பேசி மூலமாக உறுப்பினா்கள் ஆபாச படம் பாா்த்த

காட்சிகள் வெளியாகின.

இதன் எதிரொலியாக, தமிழக சட்டப் பேரவையின் அவை விதிக் குழு உடனடியாக கூடியது. தமிழக சட்டப் பேரவை மண்டபத்துக்குள் செல்லிடப்பேசி எடுத்துவருவதற்கு தடை விதித்து, அவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், செல்லிடப்பேசிகளை பேரவை லாபிகளில் வைப்பதற்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் பேரவை மண்டபத்துக்குள் கையடக்கக் கணினி போன்ற கருவிகளை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால், அவை விதிகளில் அதற்கான உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென அவை விதிகள் குழு விரைவில் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் குழுவில் பேரவையில்

இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் உள்ளனா்.

அவை விதிகள் குழு பரிந்துரைக்கும் திருத்தங்களின் அடிப்படையில், பேரவை மண்டபத்துக்குள் கையடக்கக் கணினி பயன்படுத்தப்படும். அவை சாா்ந்த நிகழ்வுகளுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் அவை விதிகளில் திருத்தம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →