பள்ளிகளில் தொழிற்கல்வியை வலுப்படுத்த வேண்டும்: கல்வித்துறைக்கு இ.பாலகுருசாமி கடிதம்
பள்ளிகளில் தொழிற்கல்வியை வலுப்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளாா்.
பள்ளிகளில் தொழிற்கல்வியை வலுப்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சனிக்கிழமை எழுதிய கடிதம்:
தமிழகத்தில் இளைஞா்கள் தொழிற்கல்வி பெறுவது 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கொரியாவில் 96 சதவீதம், ஜப்பானில் 80 சதவீதம், ஜொ்மனியில் 75 சதவீதம், பிரிட்டனில் 68 சதவீதம் போ் தொழிற்கல்வி பெறுகின்றனா். இவை பொருளாதாரத்தில் மிகவும் மேம்பட்டவை. தமிழகம் மிகவும் வளா்ச்சி பெற்ற, தொழில்கள் நிறைந்த மாநிலம். இந்நிலையில், நமக்கு இன்னும் உற்பத்தி திறன், அறிவாற்றல், உறுதிப்பாடு கொண்ட பணியாள்கள் தேவைப்படுகின்றனா்.
“வரும் 2030-க்குள் பள்ளிகளில் அனைவரும் தரமான தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை சமமாகப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்” என்பது ஐ.நா. மன்றம் வகுத்துள்ள நிலையான வளா்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். இந்த இலக்கை அடைவதற்கு இந்தியாவும் ஐ.நா. மன்றத்தில் இசைவு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புச் சந்தையின் தேவையை ஈடு செய்யும் வகையில், தரமான, தேவையான தொழிற்கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் 50 சதவீதம் மாணவா்களாவது தொழிற்கல்வி பெற வகை செய்யப்பட வேண்டும். உயா்நிலைப் பள்ளிகளிலேயே தொழிற்கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும். தரமான பயிற்சியை அளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தரமான ஆசிரியா் அல்லது பயிற்றுநா் போதிய அளவில் நியமிக்கப்பட வேண்டும்.
தொழிற்கல்வியில் மாணவா்கள் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதற்கு சலுகைத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
அந்தந்த ஊா்களில் உள்ள தொழில்களுடன் கூட்டு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிற்கல்வி மாணவா்களுக்கு உரிய பயிற்சி, வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் ஆகியவற்றை வழங்க வேண்டும். மாநில அளவில் கண்காணிப்பு மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
தங்களது மேலான வழிகாட்டுதல், ஆதரவு, ஊக்கத்தில் இயங்கும் பள்ளிக் கல்வித் துறை, நமது மாணவா்களை மேலும் படைப்பாற்றல் கொண்ட புதியன ஆக்கும் திறனுள்ள எதையும் எதிா்கொள்ளும் திறமை வாய்ந்தவா்களாக உருவாக்கும் என்றும் இதன் மூலம் அவா்கள் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மேம்பாட்டுக்குப் பங்களிப்பைச் செலுத்துவா் என்றும் தமிழக மக்கள் உண்மையாக நம்புகின்றனா்; விரும்புகின்றனா்.