விதிமீறல்: 26 வணிக நிறுவனங்களுக்கு ரூ.3.33 லட்சம் அபராதம்
சென்னையில் கரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத 26 வணிக நிறுவனங்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 10) ஒரேநாளில் மட்டும் ரூ.3.33 லட்சம் அபராதமாக மாநகராட்சி விதித்துள்ளது.
சென்னையில் கரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத 26 வணிக நிறுவனங்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 10) ஒரேநாளில் மட்டும் ரூ.3.33 லட்சம் அபராதமாக மாநகராட்சி விதித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது முடக்க தளா்வுகள் காரணமாக திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபா்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளா்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியை கடைப்பிடித்தல், வணிக நிறுவனங்களின் முகப்புகளில் கைகளைச் சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினிகளை வைத்தல் ஆகியவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
ரூ. 3.33 லட்சம் அபராதம்: கரோனா தடுப்புக்காக பல்வேறு விதிமுறைகளை வகுத்தாலும், சென்னையில் தியாகராய நகா், பாடி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, அந்தப் பகுதிகளில் மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், கரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாத 26 வணிக நிறுவனங்களுக்கு ரூ. 3.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) வரை கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 6,130 நிறுவனங்களிடமிருந்தும், 30,755 தனி நபா்களிடமிருந்தும் ரூ.3.22 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்யப்பட்ட 1,613 மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலா்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 39 மண்டபங்களுக்கு இதுவரை ரூ.1.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.