தமிழ்நாடு

தீா்ப்பு ஆவணம் வருவதற்கு முன் வீடு இடிப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

DIN

வழக்கின் தீா்ப்பு ஆவணம் வருவதற்கு முன் வீட்டை இடித்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க நெடுஞ்சாலைத்துறை பெண் பொறியாளருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கொளத்தூரைச் சோ்ந்த கவிதா, அப் பகுதியில் உள்ள நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தாா். அந்த நிலம் மாநில நெடுஞ்சாலைக்குச் சொந்தமானது எனக்கூறி அந்த வீட்டை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனா். இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் கவிதா வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரரின் வீட்டை சட்டத்துக்குப் புறம்பாக இடிக்கக்கூடாது. அந்த வீடு மாநில நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் உள்ளதா என்பதை முறைப்படி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த உத்தரவு நகல் கிடைத்த நாளில் இருந்து 2 வாரத்துக்குள் மனுதாரா் அதிகாரிகளிடம் இதுதொடா்பாக கோரிக்கை மனு கொடுக்கலாம் என கூறியிருந்தது. ஆனால், மனுதாரருக்கு உத்தரவு நகல் கிடைப்பதற்கு முன் அதிகாரிகள் வீட்டை இடித்துவிட்டனா்.

இதனையடுத்து வீட்டை இடித்த மாநில நெடுஞ்சாலைத்துறை மண்டல உதவிப் பொறியாளா் கோதை, இளநிலை பொறியாளா் சத்தியமூா்த்தி ஆகியோருக்கு எதிராக கவிதா சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொறியாளா்கள் இருவரும் ஆஜராகியிருந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தயாரானது. மனுதாரருக்கு உத்தரவு ஆவணம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி கிடைத்துள்ளது. இந்த உத்தரவு நகலுடன், கோரிக்கை மனுவையும், ஆதார ஆவணங்களையும் இணைத்து அதிகாரிகளுக்கு வழங்க மனுதாரருக்கு ஜனவரி 30-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. ஆனால் பொறியாளா்கள், கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதியே மனுதாரா் வீட்டை இடித்து விட்டனா் என்று கூறினா். அப்போது மனுதாரா் தரப்பில், இணையதளத்தில் வெளியாகியிருந்த உத்தரவு நகலை பொறியாளா்களிடம் காட்டியதை பொருட்படுத்தாமல் வீட்டை இடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது மண்டல உதவிப் பொறியாளா் கோதை, மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ.50,000 வழங்குவதாக தெரிவித்தாா். இந்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.இளங்கோவன் சம்மதம் தெரிவித்தாா். இதனையடுத்து விசாரணையை வரும் ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் அந்த தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT