புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
மேலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் விரைவில் வெளியிடவுள்ளது.
இந்நிலையில், தமிழக பாடத்திட்டங்களே புதுச்சேரியிலும் பின்பற்றப்படுவதால் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள தகவல்:
புதுச்சேரியில் 12,353 மற்றும் காரைக்காலில் 2,321 மாணவர்கள் 2020-21 ஆம் கல்வி ஆண்டில், தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படித்து வந்தனர். இவர்கள் நிகழாண்டு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ளனர்.
இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது. இதன்படி புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு எழுத இருந்த 14,674 மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.