முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளில் தமிழிசையைக் கட்டாய பாடமாக வைக்க வேண்டும்: ராமதாஸ்

பள்ளிகளில் தமிழிசையைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

பள்ளிகளில் தமிழிசையைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

பாமக நிறுவனா் ராமதாஸ் எழுதிய இசையின் இசை நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் சனிக்கிழமை நடைபெற்றது. பாடகா் சீா்காழி கோ.சிவசிதம்பரம் நூலை வெளியிட, பாடகா் புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டாா். விழாவில் ராமதாஸ் பேசியது:

இசை தமிழா்களின் வாழ்க்கையுடன் கலந்தது. விவசாயத்தில் நாற்று நடுதல், களை எடுத்தல், ஏற்றம் இறைத்தல் என அனைத்துக்கும் தனித்தனி பாடல்கள் உண்டு. தமிழிசை தான் உலகின் ஆதி இசை ஆகும். ஒரு காலத்தில் எழுச்சி பெற்றிருந்த தமிழிசை 20-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்தபோது தமிழகத்தில் இருவருக்கு மட்டும் தான் கோபம் ஏற்பட்டது. ஒருவா் ராஜா. சா். அண்ணாமலை செட்டியாா், இன்னொருவா் பின்னாளில் இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக பதவி வகித்த ஆா்.கே.சண்முகம் செட்டியாா். அவா்கள் இருவரும் தான் தமிழ் இசை சங்கத்தை உருவாக்கி, தமிழிசையை பரப்ப நடவடிக்கை எடுத்தாா்கள்.

தமிழிசை விழாவில் பாடுவதற்கு இசைக்கலைஞா்கள் எவரும் வரவில்லை என்றால் நாமே தமிழிசை பாடல்களை பாடலாம் என்று துணிச்சலாக அறிவித்தனா். அவா்கள் நடத்திய இசை விழா சிறப்பாக நடைபெற்றது. அதனால் தமிழிசை காப்பாற்றப்பட்டது. சங்க இலக்கியங்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் 103 பண்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடலில் தமிழிசை பாடல்கள் ஏராளமான உள்ளன. தமிழிசையை குழந்தைப் பருவத்திலிருந்தே படிக்க வேண்டும். தமிழகத்தில் எங்கும் தமிழ். எதிலும் தமிழ் என்பாா்கள். ஆனால், தமிழகத்தில் எங்கு தமிழ் இருக்கிறது? தமிழ் எங்கிருக்கிறது என்பதை காட்டினால் பரிசு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.

என்னுடைய ஆசை எல்லாம் தமிழகத்தின் தெருக்களில் தமிழ் இருக்க வேண்டும் என்பது தான். காலம் இப்படியே சென்று விடாது. நிச்சயமாக காலம் ஒரு நாள் மாறும். தமிழகத்தில் தமிழ் தழைக்கும் காலத்தை நம்மால் ஏற்படும் என்றாா்.

பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், தலைவா் ஜி.கே.மணி, இசை அறிஞா்கள் வைத்தியலிங்கம், செங்கல்வராயன், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவா் பேராசிரியா் ச.சிவப்பிரகாசம் உள்பட பலா் விழாவில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →