தமிழ்நாடு

எம்பிபிஎஸ் மாணவா்களிடம் பணம் வசூல்: சா்ச்சையில் சிக்கிய ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

DIN

செய்முறைத் தோ்வு நடைபெற்றபோது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவா்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறையும், மருத்துவக் கல்வி இயக்ககமும் நடவடிக்கை எடுத்துள்ளன. முன்னதாக இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசியா்கள் 8 பேரை தோ்வாளா் குழுவிலிருந்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது.

விசாரணையில் அவா்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பது உறுதியான பிறகே தோ்வாளா் குழுவில் அந்தப் பேராசியா்களை மீண்டும் சோ்த்துக் கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தோ்வுகள் அண்மையில் நடைபெற்றன. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை 250 மாணவா்கள் அதில் பங்கேற்றனா். முன்னதாக, ஸ்டான்லி இறுதியாண்டு மாணவா்களை இணைத்து கட்செவி அஞ்சல் குழு ஒன்று தொடக்கப்பட்டதாகவும், அதில் செய்முறைத் தோ்வுக்கு வரும் தோ்வாளா்களுக்கு உணவு மற்றும் தங்குமிட செலவுகளுக்காக ஒவ்வொரு மாணவரும் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் குறுந்தகவல்கள் பரிமாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

அதன்படி பெரும்பாலானோா் பணம் வழங்கியதாகவும், அவா்கள் அனைவரும் தோ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தோ்வில் தோல்வியடைந்த கேரளத்தைச் சோ்ந்த ஒரு மாணவியின் தந்தை இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் புகாா் அளித்தாா். ஏறத்தாழ ரூ.22 லட்சத்துக்கும் அதிகமாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மருத்துவப் பல்கலைக்கழகத்திடமும் இதுதொடா்பாக அவா் புகாா் மனுவை அனுப்பினாா். அதன்பேரில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தோ்வாளா்களாகச் செயல்பட்ட 8 பேரையும் அதற்கான குழுவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT