கூத்தாநல்லூர்: தரம் உயர்வுக்காக காத்திருக்கும் அரசு மருத்துவமனை
கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வருகிறது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வருகிறது.
கூத்தாநல்லூர் வட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. மக்கள் தொகை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சின்ன சிங்கப்பூர் என அழைக்கக் கூடிய, கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், லண்டன், புரூனே, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வேலை செய்து சம்பாதித்தாலும் தங்களது சொந்த மண்ணில்தான் முதலீடு செய்கின்றனர்.
இங்குள்ள அரசு மருத்துவமனை 80 ஆண்டுகளை நெருங்கும் பழமையான மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடம் நைனா முகம்மது மற்றும் அவரது வாரிசுகளால் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும்.
இதுகுறித்து நகர மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எம். சமீர் கூறியது:
இந்த மருத்துவமனையில், கூத்தாநல்லூர் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான மருத்துவர்களும் இல்லை. மருந்துகளும் இருப்பில் இருப்பதில்லை. தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த கட்டட வசதியும் செய்யப்படவில்லை. இந்த மருத்துவமனை தொடக்கக் காலத்தில், ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தது. பின்னர், அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால், போதிய வசதிகள் செய்யப்படவில்லை.
தற்போது, கூத்தாநல்லூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும், ஆரம்ப சுகாதார நிலையம் போலவே இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள் காலை 9 மணிக்கு வந்து விட்டு, மதியத்துடன் போய்விடுகின்றனர். அதன்பிறகு மருத்துவர் இல்லா மருத்துவமனையாகத்தான் இயங்குகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை. அதன்பிறகு செவிலியர்கள்தான் சிகிச்சையளிக்கின்றனர். சிகிச்சைக்காக எந்த நோயாளி போனாலும், மன்னார்குடி, திருவாரூர் மருத்துவமனைக்குப் போகச் சொல்லி அனுப்புகிறார்கள். அறுவை சிகிச்சை அரங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. 24 படுக்கைகள் இருக்க வேண்டிய மருத்துவமனையில், பாதியளவு படுக்கைகள்தான் உள்ளன. பிரசவ மருத்துவர், எலும்பு முறிவுக்கு, கண் நோய்க்கு என தனித்தனி மருத்துவர்கள் இல்லை. கர்ப்பிணியின் வயிற்றில் சிசு வளர்ச்சியை தெரிந்துகொள்ள ஸ்கேன் வசதி கிடையாது. தைராய்டு பரிசோதனை கிடையாது. சர்க்கரை வியாதிக்கு தேவையான மருந்தும் கிடையாது. என எதைக் கேட்டாலும் இல்லை என்ற பதில்தான் வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு, சாதாரண மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்தான் சிகிச்சை பெற வருகிறார்கள். தலைமை மருத்துவரைக் கேட்டால் மருத்துவர் இல்லையென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்கிறார். நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வெளியில் கடையில்போய் வாங்கிக் கொள்ளுங்கள் என அனுப்பி விடுகின்றனர்.
கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இக்கட்டான கரோனா காலத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த மாவட்டமும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் தொகுதியுமான திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை சிறப்பு கவனம் கொண்டு தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மருத்துவமனைக்கு தேவையானவைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.