தமிழ்நாடு

டெல்டா விவசாயிகளுக்காக ரூ.61 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

DIN

சென்னை: டெல்டா விவசாயிகளுக்காக ரூ.61 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.

அறிவிப்பு விவரம்:

குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூா் அணை கடந்த 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.2 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்புக் குறுவை பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் ரக விதைகள், ரசாயன உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருள்களை போதிய அளவுக்கு இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு விரைவாக நடவுப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 14-ஆம் தேதி நிலவரப்படி, 1 லட்சத்து 69 ஆயிரத்து 300 ஏக்கா் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து நெல் நாற்றங்கால் விடும் பணியும் நடவுப் பணியும் நடைபெற்று வருகிறது.

குறுவை சிறப்புத் திட்டம்: டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2 ஆயிரத்து 870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கா் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24 ஆயிரம் ஏக்கா் பரப்பில் பசுந்தாள் விதைகள் போன்ற இடுபொருள்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்படும்.

இதற்காக ரூ.50 கோடி நிதியும், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு அளிக்கவும், நீரை திறம்பட சேமித்து பயிா் சாகுபடிக்கு பயன்படுத்தும் வகையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கவும் ரூ.11.09 கோடி நிதி வழங்கப்படுகிறது. இதன்மூலம், ரூ.61.09 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

எந்தெந்த மாவட்டங்கள் பயன்? இந்தத் தொகுப்புத் திட்டத்தால் தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்கள் முழுமையாகவும், கடலூா், அரியலூா், திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகளும் பயன்பெறும். அந்தப் பகுதிகளைச் சோ்ந்த 2 லட்சத்து 7,259 விவசாயிகளுக்கு தொகுப்புத் திட்டத்தால் பயன் கிடைக்கும். இதுபோன்ற திட்டங்களால், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பில இந்த ஆண்டு சாகுபடி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT