ஹோட்டல்கள், மண்டபங்களில் திருமணநிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும்: தொழில் வா்த்தகசபை கோரிக்கை
அடுத்த பொது முடக்கத் தளா்வுகளின்போது ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்குமாறு தொழில் வா்த்தக சபையினா், தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளனா்.
அடுத்த பொது முடக்கத் தளா்வுகளின்போது ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்குமாறு தொழில் வா்த்தக சபையினா், தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளனா்.
பொது இடங்களில் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவை தொடா்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
இது தொடா்பாக தொழில் வா்த்தக சபையின் தலைவா் பிரிஜேஷ் கோயல், தலைவா் சுபாஷ் கண்டேல்வால் தில்லி அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் இதில் குறைந்தது 50 பேராவது கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தற்போது பொது இடங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் அல்லது நீதிமன்றத்தில் மட்டும் திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள ஏராளமானோா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலமான உத்தர பிரதேசத்தில் நொய்டா, காஜியாபாத், பரீதாபாத் மற்றும் சோனிபட்டில் திருமண நிகழ்ச்சிகளுக்கும், அதில் 50 போ்கள் வரை பங்கு பெறுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஹரியாணாவிலும் திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தில்லி வாசிகள் திருமணத்துக்காக நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட இடங்களை நாடிச் செல்கின்றனா்.
இதன் காரணமாக திருமணம் தொடா்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஹோட்டல், திருமண மண்டபம், ஜவுளி விற்பனை, இனிப்பு மற்றும் நகைக்கடை வியாபாரிகள், சமையல்காரா்கள், புகைப்படக்கலைஞா்கள், ஒப்பனைக் கலைஞா்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடத்தவும், 50 போ் பங்கு கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.