பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மன்னார்குடி, கோட்டூரில் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் உணவுப் பொருள்களின் விலை உயர்த்திய மத்திய அரசினை கண்டித்து மன்னார்குடி, கோட்டூரில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி: மன்னார்குடி, கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் உணவுப் பொருள்களின் விலை உயர்த்திய மத்திய அரசினை கண்டித்து புதன்கிழமை நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வரலாறு காணத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இதன் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அத்தியவாசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
கரோனா பொதுமுடக்கதால் வாழ்வாதாரம் இழந்துள்ள வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த 6 மாத காலத்திற்கு மாதந்தோறும் ரூ. 7,500 வழங்க வேண்டும். மத்தியத் தொகுப்பிலிருந்து நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள், உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி இலவசமாக தங்கு தடையின்றி மாநிலங்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதுடன் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி நகரத்தின் சார்பில் மேலராஜ வீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ நகரச் செயலர் வி.கலைச்செல்வன், சிபிஎம் நகரச் செயலர் ஜி.ரகுபதி, விசிக மாநில தொழிலாளரணி இணைச் செயலர் ஆர்.ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
சாலையில் மண் அடுப்பில் விறகு வைத்து எரித்தும் கைப்பாடை கட்டி அதில் எரிவாயு உருளையை வைத்து அதற்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா, மாதர் தங்க நகரச் செயலர் ஜி.மீனாம்பிகை, இளைஞர் பெருமன்ற நகரச் செயலர் சிவ.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி ஒன்றியம் சார்பில் பழைய பேருந்து நிலையம் தனியார் பெட்ரோல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலர் எம்.திருஞானம், விசிக ஒன்றியச் செயலர்கள் ஆர்.செங்குட்டுவன், மா.ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சிபிஐ ஒன்றியச் செயலர் ஆர்.வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன், ஒன்றியச் செயலர் எஸ்.பாப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து தலைமை வகித்தார்.
பெட்ரோலியப் பொருள்கள் எரிவாயு விலை உயர்வினை வெளிப்படுத்திடும் வகையில் ஆட்டோவினை கயிறு கட்டி இழுத்தும் எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்தும் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதில், கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மு.மணிமேகலை, சிபிஐ ஒன்றியச் செயலர் (பொ) எம்.செந்தில்நாதன், சிபிஎம் ஒன்றியச் செயலர் எல்.சண்முகவேல், விசிக விவசாயணி துணை அமைப்பாளர் முருகையன், வி.தொ.ச.ஒன்றியச் செயலர் ஜெ.ஜெயராமன், மாதர் சங்க ஒன்றியச் செயலர் ஆர்.உஷா, இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலர் எம்.நல்லசுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.