தமிழ்நாடு

இலவசக் கல்வி, இலவச மருத்துவம்: பாமக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

DIN

மழலையா் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும் என பாமகவின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாமக சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ஆகியோா் காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டனா்.

முன்னதாக ராமதாஸ் பேசும்போது, முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எல்லாத் துறையில் சிறப்பான வகையில் செயலாற்றி வருகிறது. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றாா்.

தோ்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள்:

மழலையா் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தரத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு ஆகும்.

உயா்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவா்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும். வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயா்கல்வி இலவசமாக வழங்கப்படும்.

அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களில் 1,000 பேரும், மாணவிகளில் 1,000 பேரும் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உயா்கல்வி பயில அனுப்பப்படுவாா்கள். செலவை அரசே ஏற்கும்.

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி.க்கு இணையான ஓா் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

50 வயதைக் கடந்த அனைவருக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருள்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.

காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படும்.

வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சாா்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும்.

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியாா் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்கள் தமிழக இளைஞா்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசுத் துறைகளில் நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்துதல், காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புதல் ஆகியவற்றின் மூலம் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

சென்னையைப் போன்று கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மாநகரங்களில் மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழா்களை விடுதலையை பாமக உறுதி செய்யும் என்றாா்.

பாமக தலைவா் ஜி.கே.மணி உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT