திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் காவனூர் ஊராட்சி சூரணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகனூரான் மகள் தங்கம் (25). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்வம் மகன் லட்சுமி ராஜன். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாமல் நீண்டகாலமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் லெட்சுமி ராஜன் அந்த குழந்தை தன்னுடையது இல்லை எனக் கூறி வந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தையின் தந்தை லெட்சுமிராஜன் என தெரிய வந்த பிறகும் லட்சுமி ராஜன் மறுத்து வந்தார்.
இந்நிலையில் லட்சுமி ராஜனுக்கு வேறொரு பெண் பார்க்க உள்ளதை அறிந்த தங்கம் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு லட்சுமிராஜனிடம் முறையிட்டுள்ளார். லெட்சுமி ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாதவன், நாகராஜ், கவிமுரசு ஆகியோர் தங்கம் மற்றும் அவர்களது பெற்றோர்களை அடித்து உதைத்ததன் காரணமாகத் தனது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களிடம் இதுவரை காவல்துறையினர் வாக்குமூலம் பெறக் கூட வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தங்கம் தனது குழந்தையுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
அருகிலிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி கொரடாச்சேரி காவல் நிலையத்தை அனுப்பி வைத்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.