நான் நடந்து போய் தான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டேன்: முதல்வர்
நான் நடந்து போய் தான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நான் நடந்து போய் தான் முதல்வராக பதவியேற்றுக் கொண்டேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை :- ஸ்டாலின் என்ன பேசுவது என்றே தெரியாமல் என்னைப் பற்றி குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார். நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்.
ஸ்டாலின், அம்மா மறைந்தவுடன் அண்ணா திமுக கட்சி அழித்துவிடும், ஆட்சி போய்விடும் என்று நினைத்தார். நாம் ஜம்மென்று ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என்று நினைத்தார். அது முடியவில்லை. அதனால் விரக்தியின் விளிம்பில் பேசி கொண்டிருக்கிறார். அவர் மக்களை பற்றி பேசுவதில்லை. ஒரு கட்சித் தலைவர்
தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொன்னால் பரவாயில்லை.
நான்கு வருடங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி யார் என்றே தெரியாது. திடீர் என்று முதலமைச்சராகி விட்டார் என்று ஸ்டாலின் பேசினார். ஆனால் தற்போது என்னைப் பற்றி மட்டுமே எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். ஏன்
என்றால் அண்ணா திமுக சிறப்பான ஆட்சியை தந்து வலிமையாக இருக்கின்ற காரணத்தினால் என்னைப் பற்றி பேசி வருகிறார். ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து முதலமைச்சராக வருவதென்பது சாதாரண விஷயமில்லை. அவ்வளவு கஷ்டத்தை கொடுத்தார் ஸ்டாலின். அம்மா மறைந்த பிறகு பெரும்பான்மையான அண்ணா திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை ஆதரித்து என்னை முதலமைச்சராக்கினார்கள்.
இன்றைக்கு கூட ஸ்டாலின் ஊர்ந்து ஊர்ந்து போய் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார் என்று பேசி வருகிறார். நான் என்ன பல்லியா அல்லது பாம்பா ஊர்ந்து செல்ல. நான் நடந்து போய் தான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன். எப்படி பேச வேண்டும் என்ற இங்கிதம் தெரியாத தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின். மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.